கோவை: தமிழக அரசின் சார்பில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு, அது தொடர்பான மசோதா ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து திமுகவினர் ஆளுநரை விமர்சித்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் ஆளுநரை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
திமுகவை சேர்ந்த கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கே.கதிர்வேல் பெயரில் வெளியாகியுள்ள அந்த சுவரொட்டியில், ஆளுநருக்கு தமிழக அரசு செலவு செய்யும் தொகை, கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு மே வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பது உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதற்கு கீழ் சில வாசகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆளுநருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட விவகாரம் மற்றும் அதன் பின்னணி குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.