மதுரை: மதுரை மாநகராட்சி நிர்வாக கட்டுப் பாட்டில் உள்ள தமுக்கம் மாநாட்டு மைய ஒரு நாள் வாடகை ரூ.6.30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வருவாயை பெருக்க, இந்த மைதானத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.47.72 கோடியில் மாநாட்டு மையம் கட்டப்பட்டது. இந்த மையத்தை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுவரை இந்த மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா மட்டும் நடந்துள்ளது. இங்கு மாநாட்டு மையம், அரங்கம்-1, அரங்கம்-2, அரங்கம்-3, அரங்கம்-4, அரங்கம்-5, அரங்கம்-6 மற்றும் திறந்த வெளி மைதானம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: தமுக்கம் மாநாட்டு மையம் அரங்கம்-1-க்கு தினசரி வாடகை ரூ.51,148, அரங்கம்-2-க்கு ரூ.52,148, அரங்கம்-3-க்கு ரூ.2,05,433, அரங்கம்-4-க்கு ரூ.2,05,433, அரங்கம்-5-க்கு ரூ.56,889, அரங்கம்- 6-க்கு ரூ.48,475 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 6 அரங்குகளையும் சேர்த்து மாநாட்டு மையம் முழுவதும் ரூ.6,30,000 வாடகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மின்கட்டணம், டீசல் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி 18 சதவீதம் தனியாக செலுத்த வேண்டும். நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக பதிவு செய்து அனுமதி பெற வேண்டும்.