பிரபல தொழிலதிபரும் ஒப்பந்த தாரருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் மற்றும் நண்பர் வீட்டில் நேற்று இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிரா மத்தைச் சேர்ந்தவர் சேகர் ரெட்டி. தொழில் அதிபர் மற்றும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர். இவர், சென்னையில் வசித்து வருகிறார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
கிழக்கு கடற்கரைச் சாலை விரி வாக்கம், வீராணம் ஏரி தூர்வாரும் பணி உட்பட பல்வேறு முக்கிய பணிகளை சேகர் ரெட்டி நிறுவனம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆற்று மணல் எடுக்கும் ஒப்பந்த பணியையும் சேகர் ரெட்டி நிறுவனம் கவனித்து வந்ததாக தகவல் வெளியாகியது.
இவர் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சேகர் ரெட்டி, உறவினர் சீனிவாச ரெட்டி நண்பர் பிரேம் ஆகியோருக்குச் சொந்தமான அண்ணா நகர் மற்றும் தியாகராய நகர் பகுதிகளில் உள்ள 2 இடங் கள், வேலூர் மாவட்டம் காட்பாடி யில் காந்தி நகர் கிழக்கு 10-வது குறுக்குத் தெருவில் உள்ள வீடு உட்பட மொத்தம் 8 இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித் துறை அதிகாரிகள் 160 பேர் 8 குழுக்களாகச் சென்று நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அப்போது, கணக்கில் வராத 120 கிலோ தங்கம், ரூ.100 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று இரண்டா வது நாளாக சோதனை நடத்தப்பட் டது. அப்போது, கணக்கில் காட்டப் படாத மேலும் 7 கிலோ தங்கம் மற்றும் ரூ.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படு கிறது.
முறைகேடாக வாங்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியது. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.107 கோடியை வங்கியில் பணம் எண்ண பயன்படுத்தும் இயந்திரத்தை வரவழைத்து எண்ணும் பணி நேற்று தீவிரமாக நடந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத் தில் ரூ.10 கோடி புதிய ரூ.2000 நோட்டுகள். எனவே, இந்த பணம் சட்டவிரோதமாக கிடைக்க ஏற்பாடு செய்த வங்கி அதிகாரிகள் யார் என்ற பட்டியலும் தயாராகி வருகிறது. தொழிலதிபர்கள் 3 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கம் தொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சேகர் ரெட்டி சிக்கியது எப்படி?
தமிழகத்தில் மணல் விற்பனை யில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநிலத் தைச் சேர்ந்த ஒரு கனிமவள தனியார் நிறுவனம், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையோடு பல்வேறு முறைகேடு களில் ஈடுபட்டு பணத்தை சட்ட விரோதமாக குவித்து வருவதாக வருமான வரித் துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதையடுத்து சேகர் ரெட்டியின் செல்போன் பதிவுகளைச் சட்டத் துக்கு உட்பட்டு வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 6 மாதமாக சேகரித்துள்ளனர். அதை அடிப்படையாக வைத்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
தமிழக அரசின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் மற்றும் பிரபல அரசியல்வாதியின் மகன் ஒருவரும் சேகர் ரெட்டியிடம் அடிக்கடி போனில் பேசி வந்துள் ளார். மணல் முறைகேட்டில் கிடைக் கும் பணம், அதை பதுக்குவது, பங்கு போடுவது என பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர்கள் அடிக்கடி பேசிய உரையாடல்களை வருமான வரித் துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
இந்த ஆதாரத்தின் அடிப்படை யிலேயே மிகவும் செல்வாக்கான நபராக திகழ்ந்த சேகர் வீட்டிலும், அவரது கூட்டாளி வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். சேகர் ரெட்டியின் கூட்டாளிகளிடம் விரை வில் விசாரணை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் இருந்து இதுவரை ரூ.127 கோடி, 150 கிலோ தங்கம் மற்றும் 500 கோடியை வெவ் வேறு வங்கிகளில் முதலீடு செய்த தற்கான ஆவணங்கள் சிக்கியுள்ள தாகவும், அவரது ஒப்பந்த விவரங்களும் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
198 இடங்களில் சீல்
இதற்கிடையே சேகர் ரெட்டி யின் காட்பாடி வீட்டில் வேலூர் மண்டல வருமான வரித் துறை உதவி ஆணையர் முருக பூபதி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சோதனைக்கு வந்தனர். வீடு பூட்டியிருந்ததால், அதிகாரிகள் குழுவினர் சிறிது நேரம் காத் திருந்தனர். மாலை 6.20 மணி யளவில் சேகர் ரெட்டியின் உறவினர் ஒருவர் வந்த பிறகு வரவேற்பு அறை வாசல் கதவு மட்டும் திறக்கப்பட்டது.
சேகர் ரெட்டி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் வீட்டின் ஜன்னல், கதவுகள், வென்டிலேட்டர் என வீட்டைச் சுற்றிலும் 198 இடங்களில் ‘சீல்’ வைத்தனர். பின்னர், வீட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட நோட்டீஸை இரவு 10.30 மணியளவில் ஒட்டினர். வீட்டுக்கு ‘சீல்’ வைத்ததால் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை சேகர் ரெட்டியின் வீட்டுக்கு வைக்கப் பட்ட ‘சீலை’ வருமான வரித் துறை அதிகாரிகள் சரிபார்த்தனர். இது தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘வீட்டில் யாரும் இல்லாத தால் சோதனை நடத்த முடிய வில்லை. எனவே, வீட்டில் இருக் கும் ஆவணங்கள் உள்ளிட்ட தடயங் களை மறைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வருமான வரித் துறை சட்டப் படி வீட்டுக்குள் நுழைய வாய்ப் புள்ள அல்லது ஆவணங்களைச் சேதப்படுத்த வாய்ப்புள்ள 198 இடங்களைக் கண்டறிந்து ‘சீல்’ வைத்துள்ளோம். வருமான வரித்துறை சோதனைக்கு அவர் சம்மதிக்கும்போது முழுமையான சோதனை நடத்தப்படும். முன்ன தாக நாங்கள் வைத்த 198 ‘சீலும்’ சேதம் ஆகாமல் இருக்கிறதா? என்பதை சோதிப்போம். அப்படி ‘சீல்’ ஏதாவது சிதைத்திருந்தால் அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.