திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் அவதிப்படுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் கடந்த ஒரு வாரமாக இடை விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், மலை கிராமங்களில் உள்ள ஓடை களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மலைகளில் திடீர் அருவியும் ஏற்பட்டுள்ளன. இதனால் மலைகளில் நடந்து செல்லவும் மற்றும் ஒற்றையடி பாதையாக இருக்கும் சாலைகளில் நடந்தும் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலையில் மலைவாழ் மக்கள் தவிக்கின்றனர்.
சேராமந்தை கிராமத்தில் இருந்து மலை வழியாக இறங்கி, 3 கி.மீ., தொலைவில் உள்ள கூட்டாத்தூர் சென்று, பின்னர் அவ்வழியாக வரும் பேருந்து மூலமாக ஜமுனாமரத்தூரை அடைந்து காய்கறி மற்றும் மளிகை பொருட்களை மலைவாழ் மக்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக மலையில் அருவி உருவாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், உயிரை பணயம் வைத்து நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சேராமந்தை கிராமத்தில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள வாழைக்காடு சென்று, பின்னர் அங்கிருந்து நல்லாப் பட்டு, அத்திப்பட்டு வரை செல்லும் குறுகிய மலை பாதையில் இரு சக்கர வாகனங்களில் 18 கி.மீ., பயணித்து, ஜமுனாமரத்தூரை சென்றடையலாம். தொடர் மழையால், குறுகிய மலை பாதையில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது ஆபத்தாக உள்ளன. மேலும், மழைக்கு சாலையும் படு மோசமாக உள்ளதால், இரு சக்கர வாகனத்தில் செல்ப வர்கள் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர்.
இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சேராமந்தை, வாழைக்காடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து சேராமந்தை மலை கிராம மக்கள் கூறும்போது, “தொடர் மழையால், நாங்கள் செல்லும் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நடந்துக் கூட செல்ல முடியவில்லை. காய்கனி மற்றும் மளிகைப் பொருட் கள் கிடைக்காமல் அவதிப் படுகிறோம். நியாய விலை கடையில் வழங்கப்பட்ட அரிசியை மட்டும் பயன்படுத்தி கஞ்சி மட்டுமே குடித்து வாழ்கிறோம்.
மழை நீடிக்கும் வரை, ஜமுனாமரத்தூருக்கு செல்ல முடியாது. இந்த நிலை எங்களுக்கு மட்டும் ஏற்படவில்லை. ஜவ்வாது மலையில் வசிக்கும் ஒவ்வொரு மலைகிராம மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே, சேராமந்தை உட்பட பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு காய்கனி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.