திருப்பத்தூர்: ஆண்டியப்பனூர் அணையின் மேம்பாட்டு பணிகளை சரிவர செய்யாத நீர்வளத்துறை செயற் பொறியாளர் மற்றும் உதவி செயற் பொறியாளரிடம் விளக்கம் கேட்டு ‘மெமோ’ வழங்க மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அணையை சுற்றுலாத் தலமாக மாற்ற அங்கு பல்வேறு பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. உரிய நிதி ஒதுக்கியும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, ஆண்டியப் பனூர் அணையை நேரில் ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று காலை ஆண்டியப்பனூர் அணைக்கு சென்றார். அணையை பார்வையிட்ட ஆட்சியர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்த போது, பல்வேறு பணிகள் கிடப்பில் உள்ளதும், மேம்பாட்டு பணிகள் சரிவர மேற்கொள்ளாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உடனே, இது குறித்து முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என நீர்வளத்துறை செயற் பொறியாளர் ரமேஷ், உதவி செயற் பொறியாளர் பாலாஜி ஆகியோருக்கு ‘மெமோ’ வழங்கி ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தர விட்டார்.
இதையடுத்து, ஆண்டியப்பனூர் ஊராட்சியில் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். அதில், கட்டு மான பணிகளும் காலதாமாக நடந்து வருவது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணவாளன், உதவி பொறியாளர் தொட்டலாம்பாள், பணி மேற்பார்வையாளர் தாமரைக்கண்ணன் ஆகியோரிடம் விளக்கம்கேட்டு அவர்களுக்கும் ஆட்சியர் அமர்குஷ்வாஹா ‘மெமோ’ வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, திருப் பத்தூர் அடுத்த மிட்டூரில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதியில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு நடத்தினார். அப்போது, மாண வர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்ட மதிய உணவை பரிசோதித்தார். அதில், உணவு பட்டியல் படி உணவு வகைகள் தயார் செய்யப் படவில்லை என்பதால் விடுதி காப்பாளர் விஜயகுமாருக்கும் மெமோவை ஆட்சியர் வழங்கினார். இவ்வாறாக ஆய்வு செய்ய சென்ற இடத்தில் பணியில் மெத்தனமாக இருந்த 6 அரசு அலுவலர்களுக்கு ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் ‘மெமோ’ வழங்கிய சம்பவம் அரசு அலுவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், நியாய விலை கடைகளில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு நடத்தினார். நியாய விலை கடையில் ஆய்வு நடத்திய ஆட்சியர் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களில் எடையளவு சரியாக இருக்க வேண்டும். பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பொருட் களில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இந்த ஆய்வின்போது மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் முருகேசன், உமா, திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், பிடிஓக்கள் மணவாளன், சங்கர், நீர் வளத்துறை உதவி பொறியாளர் சக்தி உட்பட பலர் உடனிருந்தனர்.