சென்னை: ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் ரூ.4,250 கோடி நிதியுதவியில் செயல்படுத்தப்படும் 3-வது கட்ட நீடித்த நகர்ப்புற கட்டமைப்பு திட்டத்துக்கான ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறப்பட்டன.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KFW), தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் (TNUIFSL) ஆகியவை இடையே திட்ட ஒப்பந்தம் மற்றும் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி, தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான தனி ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பரிமாறப்பட்டன.
ஜெர்மனி அரசு சார்பில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி கடந்த 2008 முதல் தமிழக அரசுடன் இணைந்து நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்புக்கான நிதியுதவி - தமிழ்நாடு (SMIF-TN) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஜெர்மன் மேம்பாட்டு வங்கி உதவியுடன் நகர்ப்புற உள்கட்டமைப்புக்கான நிதியுதவி - தமிழ்நாடு திட்டம், சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாத்து நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் ரூ.1,969.47 கோடி மதிப்பில் 2 நிலைகளை கொண்டது. திட்டத்தின் முதல் நிலை கடந்த 2015 டிசம்பர் மாதமும், 2-ம் நிலை – பகுதி 1 கடந்தாண்டு டிசம்பர் மாதமும் நிறைவடைந்தன. 2-ம் நிலையின் பகுதி 2 திட்டமானது இம்மாதம் முடிவடையும்.
இதன் தொடர்ச்சியாக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500 மில்லியன் யூரோ, அதாவது இந்திய மதிப்பில் ரூ.4,250 கோடி, மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உள்கட்டமைப்புக்கான நிதியுதவி- தமிழ்நாடு (SMIF-TN-III) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் மத்திய அரசு இடையில் கடந்த நவ. 24-ம் தேதி கடன் ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது.
இதையடுத்து, சென்னையில் கடந்த டிச. 2-ம் தேதி ஜெர்மன் மேம்பாட்டு வங்கி, தமிழக அரசு அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே தனி ஒப்பந்தமும் கையெழுத்தானது. இவ்விரண்டு ஒப்பந்தங்களும் தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாறப்பட்டது.
நகர்ப்புற உள்கட்டமைப்பில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் மற்றும் அதன் தொடர்புடைய இடர்களை கையாள்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறனை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் வரும் 2030-ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சென்னையில் உள்ள ஜெர்மனி துணை தூதர் மிக்கேலா குச்லர், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் எஸ்.ஸ்வர்ணா, துணைத் தலைவர் டி.ராஜேந்திரன், ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் இந்தியாவுக்கான இயக்குநர் உல்ஃப் முத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.