பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

மேட்டூர் அணை | டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 21,000 கனஅடியாக அதிகரிப்பு

எஸ்.விஜயகுமார்

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 21,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த ஜூலை 16ம் தேதியில் இருந்து ஓரிரு நாட்களை தவிர தற்போது வரை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர் முழுவதும் டெல்டாவிற்கு வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், அணைக்கு நேற்று வரை விநாடிக்கு 7,600 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதில் 7,000 கனஅடி நீர் டெல்டா பாசனத்திற்கும், அணையின் கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு இன்று விநாடிக்கு 11,600 கனஅடியாக அதிகரித்தது. இந்த சூழலில், டெல்டா பாசனத்திற்கான நீர் தேவையும் அதிகரித்ததால், அணையில் இருந்து டெல்டாவிற்கு திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு விநாடிக்கு 7,000 கனஅடி என்ற அளவில் இருந்து இன்று காலை விநாடிக்கு 21,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கான நீர் திறப்பு விநாடிக்கு 600 கனஅடியாக நீடிக்கிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் இருக்கிறது.

SCROLL FOR NEXT