நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன் நேற்று திரண்ட ரசிகர்கள். (முதல் படம்) ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த லதா ரஜினிகாந்த். படங்கள்: பு.க.பிரவீன். 
தமிழகம்

ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாள் - முதல்வர், அரசியல் கட்சியினர் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சென்னை போயஸ்கார்டனில் உள்ள வீட்டின்முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். கொட்டிய மழையிலும் ரசிகர்கள் நனைந்தவாறே அங்கு ‘கேக்’ வெட்டி ரஜினிகாந்தின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

இதையடுத்து லதா ரஜினிகாந்த், காத்திருத்த ரசிகர்களிடம், ‘‘ரஜினிகாந்த் ஊரில் இல்லை. அவரது சார்பாக, வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம்’’ என்று கூறினார். இதையடுத்து ரசிகர்கள் கலைந்து சென்றனர்.

தலைவர்கள் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனதுட்விட்டர் பதிவில், ‘‘என் இனிய நண்பர், தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து. நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி: அன்பு சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்து.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: எனது இனிய நண்பரும், மனிதநேயப் பண்பாளருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக வாழ்த்துகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி: நடிகர் ரஜினிகாந்துக்கு எனதுஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து.உங்கள் வெற்றிப் பயணம் தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமக தலைவர் சரத்குமார், நடிகர்கள் தனுஷ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT