தமிழகம்

இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னை-யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமான சேவை தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: கரோனா தொற்றால் கடந்த இரண்டரை ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்த, சென்னை-யாழ்ப்பாணம் பயணிகள் விமான சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.

இலங்கையில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்ட பலாலி விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டு, 2019-ல் திறக்கப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் 11-ம் தேதி சென்னை-யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவையை அலையன்ஸ் ஏர் நிறுவனம் தொடங்கியது. இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை உள்ளிட்ட ஏராளமான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

கரோனா பாதிப்பு பெருமளவு குறைந்ததால், சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால், சென்னை-யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை மட்டும் தொடங்காமல் இருந்தது.

4 நாட்கள் விமான சேவை: மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு சென்னையில் இருந்து விமான சேவையைத் தொடங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை-யாழ்ப்பாணம் இடையே நேற்று அலையன்ஸ் ஏர் நிறுவனம் விமான சேவையைத் தொடங்கியது.

வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இருந்த விமான சேவை தற்போது 4 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கையில் அதிகமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கும், இந்த விமான சேவை உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சென்னை-யாழ்ப்பாணம்-சென்னை இடையே அலையன்ஸ் ஏர் நிறுவனம் இயக்கும் சிறிய ரக ஏடிஆர் விமானத்தில் 64 இருக்கைகள் உள்ளன. நேற்று முதல் நாள் என்பதாலும், பயணிகளுக்கு விரிவான அறிவிப்பு இல்லாததாலும் 12 பயணிகள் மட்டுமே சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT