கோவை: கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரும், சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த முகமது தல்கா (25), அசாருதீன் (23), ரியாஸ் (27) பெரோஸ் இஸ்மாயில் (26), நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, முதலில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக நேற்று காலை கோவை மத்திய சிறையில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக என்ஐஏ அதிகாரிகள் மேற்கண்ட 6 பேரையும் கோவையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆஜர்படுத்திய பின்னர், அவர்களை சென்னை புழல் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.