தமிழகம்

முக்கோண காதல் தகராறில் இளைஞர் கடத்தி கொலை: உடலை எரித்து ஆந்திராவில் வீசிய கூலிப்படை

செய்திப்பிரிவு

சென்னையில் முக்கோண காதல் தகராறில் இளைஞர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் எரிக்கப்பட்டு ஆந்திராவில் வீசப்பட்டது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விக்கி என்ற புஷ்பராஜ் (27). ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார்.

கடந்த மாதம் 28-ம் தேதி வேலைக்கு சென்ற விக்கி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. மகனை காணாமல் பல இடங்களில் தேடிய பெற்றோர் திருவொற்றியூர் போலீஸில் புகார் செய்தனர். ஆனால், விக்கி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் விக்கியின் பெண் தோழியான சுஜாதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்கியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம், “விக்கி பணியாற்றிய நிறுவனத்தில் நானும் வேலை செய்தேன். அவரை நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர் எங்கே?” என்று கேட்டார். “அவனை ஒரு மாதமாக காணவில்லை. எங்கே சென்றான் என்றே தெரியவில்லை” என்று விக்கியின் பெற்றோர் கூறி வருந்தினர்.

இதனால் சந்தேகம் அடைந்த சுஜாதா, விக்கியின் பெற்றோரிடம், “விக்கி முன்பு வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளர் சதாசிவம் (54) மீது சந்தேகமாக உள்ளது. அவர் விக்கியை ஏதாவது செய்திருக்கலாம்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த விக்கியின் பெற்றோர், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். திருவொற்றியூர் உதவி ஆணையர் நசீர்பாஷா, ஆய்வாளர் பிரபு ஆகியோர் சதாசிவத்தை பிடித்து விசாரணை நடத்த, அவர் கூலிக்கு ஆட்களை வைத்து விக்கியை கடத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸார் கூறும்போது, "திருவொற்றியூர் தாங்கல் மேட்டு தெருவில் ரூப்டெக் என்ற நிறுவனம் உள்ளது. மேற்கூரைகளை அமைத்துக் கொடுக்கும் இந்நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக சுஜாதா உள்ளார். திருமணமான இவருக்கும், நிறுவனத்தின் உரிமையாளர் சதாசிவத்துக்கும் இடையே தவறான தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் அங்கு வேலை செய்த விக்கிக்கும் சுஜாதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சதாசிவம் கண்டித்து, விக்கியை வேலையில் இருந்து நீக்கியிருக்கிறார். ஆனால் அதன் பின்னரும் விக்கி, சுஜாதா தொடர்பு நீடித்துள்ளது. இது சதாசிவத்துக்கு தெரியவர அவர் மிகவும் ஆத்திரம் அடைந்தார். இதனால் விக்கியை தீர்த்துக்கட்ட அவர் திட்டம் தீட்டினார்.

ரூ.8 லட்சம் பேரம்

பின்னர் சதாசிவம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த எஸ்தர் ராணி(36) என்ற பெண்ணிடம் விக்கியை கொலை செய்ய ஆட்கள் இருந்தால் தெரிவிக்குமாறும், இதற்காக ரூ.8 லட்சம் தருகிறேன் என்றும் கூறியிருக்கிறார். எஸ்தர் ராணியின் ஏற்பாட்டில் அதே பகுதியை சேர்ந்த விமல், பாண்டு, பாபு, சத்தியநாராயணா, ரமேஷ் ஆகியோர் கடந்த 28-ம் தேதி விக்கியை காரில் கடத்திச் சென்று கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். பின்னர் உடலை ஆந்திர மாநிலம் கடப்பா அருகே காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

7 பேர் கைது

கொலைச் சம்பவம் தொடர்பாக சதாசிவம், எஸ்தர்ராணி, விமல், பாண்டு, பாபு, சத்தியநாராயணா, ரமேஷ் ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வெளியில் தெரிய காரணமாக இருந்த சுஜாதாவிடமும் விசாரணை நடக்கிறது" என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஆந்திராவில் எரித்து வீசப்பட்ட விக்கியின் உடலை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள விமல், பாண்டு ஆகியோருடன் தனிப்படை போலீஸார் ஆந்திராவுக்கு சென்றுள்ளனர். கொலை நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டதால் எரிக்கப்பட்ட உடலை கண்டுபிடிப்பது கடினமானதாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT