பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

பவானிசாகரில் இருந்து உபரி நீர் திறப்பு: கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படுவதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் 105 அடி வரை, 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். கடந்த மாதம் பவானிசாகர் அணை முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து, உபரி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து குறைந்ததாலும், பாசனத் துக்கு நீர் திறக்கப் பட்டதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

இந்நிலையில், பவானி சாகர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணைக்கான நீர் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. மேலும், கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு காரணமாக, பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 104.50 அடியை எட்டியது. இதையடுத்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து பொதுப் பணித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104. 50 அடியை எட்டியதும், அணைக்கான நீர் வரத்து முழுவதும் உபரி நீராக திறக்கப்படவுள்ளது. எனவே, பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT