சென்னை: சென்னை மாநகரில் புயலால் உருவான மரக்கழிவுகளில் இருந்து நிலக்கரிக்கு இணையான மாற்று எரிபொருளைமாநகராட்சி நிர்வாகம் தயாரித்து, தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய உள்ளது.
மேன்டூஸ் புயலால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு சுமார் 70 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதில் சென்னையில் ஏராளமான மரங்கள் மற்றும் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. இப்படி 207 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக் கிளைகளும் சாலைகளில் விழுந்ததாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவை 100டிப்பர் லாரிகள் உதவியுடன், 291 நடைகளில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அவ்வாறு மொத்தம் 644 டன் மரக் கழிவுகள் கொண்டு செல்லப்பட்டன.
இந்த மரக்கழிவு குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``இந்த மரக்கழிவுகளை நவீன இயந்திரங்கள்உதவியுடன் பொடியாக்குகிறோம். அந்த பொடியை நிலக்கரிக்கு இணையான மாற்று எரிபொருளாக மாற்றுகிறோம்.
இது தொழிற்சாலை கொதிகலன்களில், நிலக்கரிக்கு பதிலாக மாற்றுஎரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது காற்று மாசுவையும் ஏற்படுத்துவதில்லை; சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது" என்று அதிகாரிகள் கூறினர்.