திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
எழுத்தாளர் வண்ணதாசனுக்கு 2015-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுக சார்பிலும், கருணாநிதி சார்பிலும் அவருக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூத்த எழுத்தாளரும், பொதுவுடைமைவாதியுமான தி.க.சிவசங்கரனின் புதல்வரான வண்ணதாசன், தந்தையைப் போலவே சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது அவரது படைப்பாற்றலைக் காட்டுகிறது. உயர் தனிச் செம்மொழியான தமிழின் படைப்புகளும், படைப்பாளர்களும் இந்திய, உலக அளவில் புகழ் பெற வேண்டும். அதற்கு திமுக துணை நிற்கும்.