சென்னைத் துறைமுகம் சார்பில் நடைபெற்ற துறைமுக தின விழாவில் பங்கேற்ற துறைமுக தலைவர் சுனில் பாலிவால் (இடது), மற்றும் துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார். 
தமிழகம்

மேன்டூஸ் புயல் வீசிய நேரத்திலும் தடங்கலின்றி கையாளப்பட்ட சரக்குகள்: சென்னை துறைமுக தலைவர் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: மேன்டூஸ் புயல் வீசிய நேரத்திலும் எவ்வித தடங்கலுமின்றி சரக்குகள் கையாளப்பட்டன என துறைமுக தின விழாவில் சென்னைதுறைமுக தலைவர் சுனில்பாலிவால் கூறினார்.

சென்னை துறைமுகம் சார்பில் துறைமுக தினம் நேற்று கொண்டாடப்பட்டது. துறைமுக போக்குவரத்து மேலாளர் எஸ்.கிருபானந்தசாமி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பேசியதாவது: சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாள்வதில் ஊழியர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, மேன்டூஸ் புயல் வீசிய நேரத்திலும் எவ்வித தடங்கலுமின்றி சரக்குகள் கையாளப்பட்டன.

காமராஜர் துறைமுகம் 100 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைக்க முன்னேற வேண்டிய நேரம் இது. சென்னை துறைமுகம் வரும் 2024-ம் நிதியாண்டில் சிறப்பாக செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பாக வர்த்தகம் புரிந்த நிறுவனங்களுக்கு விருதுகளை சுனில்பாலிவால் வழங்கினார். கரோனா தொற்றால் உயிரிழந்த 3 ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துறைமுக துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT