சென்னை: தேனி பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் ஓபிஎஸ் மகனுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 394 கோயில்களில் இதுவரை கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் - கேரளா எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அந்த கோயிலை அறநிலையத்துறை வசம் கொண்டு வருவது குறித்து கேரள அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுப்போம்.
கோயில் அனைவருக்கும் சமமானது. எனவே, அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் விஐபி பாஸ் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது. கோயில்களின் வசதிக்கு ஏற்ப சிறப்பு தரிசனத்தையும் ரத்து செய்துள்ளோம். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீப தினத்தில் ஓபிஎஸ் மகனுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிலை மீட்புப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து 62 சிலைகள் மீட்கப்பட்டு இருக்கிறது. காணாமல் போன சிலைகளை மீண்டும் கோயிலில் வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். காசிமேட்டில் முதல்வர் அடுத்த இடத்தில் ஆய்வுக்கு செல்வதால், அங்கு விரைவாக செல்வதற்காக பாதுகாப்பு வாகனத்தில் மேயர் இயல்பாக பயணித்தார்.
பேரிடர் காலத்தில் ஆணுக்கு நிகராக துணிச்சலாக பெண் பணி செய்வதை பாராட்ட வேண்டும். இதை அதிகார துஷ்பிரோயமாக பார்க்கக் கூடாது. திராவிட மாடல் என்பதற்கு பதிலாக, நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என்று தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். ஆளுநர் அவருக்கான வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். தமிழகத்தின் திராவிட மாடல்தான் இந்திய அளவில் கொடி கட்டிப் பறக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.