தமிழகம்

சாலையை அகலப்படுத்துவதாகக் கூறி தஞ்சாவூர் அடையாளங்களில் ஒன்றாக செயல்படும் பூச்சந்தை இடமாற்றம்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடையாளங்களில் ஒன்றாக செயல்படும் பூச்சந்தையை இடமாற்றம் செய்வதால், ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் விளார் சாலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 82 ஆண்டுகளுக்கு முன்பு பூச்சந்தை, காய்கறி சந்தை, விளைபொருட்களின் ஏல கூடங்கள் ஆகியவை தொடங்கப்பட்டன. கிராமங்களிலிருந்து விவசாயிகளால் கொண்டு வரப்படும் தானியங்கள் உள்ளிட்ட விளைபொருட்கள் அனைத்தும் பூச்சந்தையில் உள்ள ஏலக்கூடத்தில் விற்பனை செய்வது காலங்காலமாக நடைபெற்று வருகிறது.

அதேபோல, தஞ்சாவூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் பூக்கள், தஞ்சாவூர் பூச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் இங்கிருந்து மன்னார்குடி, வேதாரண்யம் வரை பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த பூச்சந்தையில் 60 பெரிய வியாபாரிகளும், 100-க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகளும் உள்ளனர். மேலும் பூச்சந்தையை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட மாலைகடைகள் உள்ளன.

தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக செயல்படும் இப்பூச்சந்தை வியாபாரிகள் அறநிலையத் துறைக்கு குறைந்தபட்ச வாடகையை செலுத்திவிட்டு வாழ்வாதாரத்தை நகர்த்தி வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் திடீரென பூச்சந்தை உள்ள விளார் சாலையை அகலப்படுத்துவதாகக் கூறி, வியாபாரிகளை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ளஇடத்துக்கு இடமாற்றம் செய்துள்ளது. ஆனால், அங்கு சென்றால்வீடுகளில் பூக்களை கட்டுவோர் முதல் பூச்சந்தையை நம்பியுள்ள வியாபாரிகள் வரை அனைவரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பூச்சந்தையில் பழ வியாபாரம் செய்து வரும் வியாபாரி காஜாமொய்தீன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: 160 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் இடத்தில்தான் குடியிருப்புகள், மார்க்கெட்டுகள் அமைந்துள்ளன.

தற்போது மாநகராட்சி நிர்வாகம் சாலையை மேலும் அகலப்படுத்துவதாக கூறி, கோயில் இடத்தைநம்பி வாழ்க்கையை நடத்துபவர்களிடம் அதிக வாடகையை வசூலிக்க வேண்டும் என திட்டமிட்டு, பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு பூச்சந்தையை மாற்றியுள்ளனர். தற்காலிகமாக என கூறப்பட்டாலும் மீண்டும் இங்கு பூச்சந்தை இயங்குமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அறநிலையத் துறை எந்த அறிவிப்பும் செய்யாத நிலையில், பூச்சந்தையில் ஒரு சில வியாபாரிகளை மட்டும் தூண்டிவிட்டு அவர்களை இடமாற்றம் செய்ய வைத்துள்ளனர். ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் இங்கேயே கடை வைத்துள்ளனர். எனவே கடையை தொடர்ந்து நடத்த மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: பூச்சந்தை சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக வந்த புகாரை அடுத்து சாலையை அகலப்படுத்தவே பூச்சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது என்றனர்.

SCROLL FOR NEXT