புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சேதமடைந்த சாலையில் கிராமத்தினரால் நேற்று ஏற்படுத்தப்பட்ட தடுப்பு. 
தமிழகம்

கீரமங்கலம் அருகே சீரமைக்கப்படாத சாலையில் தடுப்பு ஏற்படுத்திய மக்கள்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சாலை சீரமைக்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் நேற்று சாலையில் தடுப்பு அமைத்தனர்.

கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியில் இருந்து செரியலூர் இனாம் வழியாக பர்மா காலனி, செரியலூர் ஜமீன், வேம்பங்குடி கிழக்கு ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சாலை மிக மோசமாக மாறிவிட்டது.

இந்தச் சாலையை யார் சீரமைப்பது என்று கீரமங்கலம் பேரூராட்சி, செரியலூர் இனாம் ஊராட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையே குழப்பம் இருந்ததால், கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இதனால், சாலை குண்டும், குழியுமாக மாறி, ஆங்காங்கே மழைநீர் தேங்கி, நடந்துகூட செல்ல முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.

இந்தச் சாலையைச் சீரமைக்க பலமுறை மனு அளித்தும் தீர்வு ஏற்படாததால், பர்மா காலனி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையின் நடுவே கல் தூண்களை நட்டு, கம்புகளைக் கட்டி தடுப்புகளை ஏற்படுத்தினர்.

தகவலறிந்த கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்தினர், போலீஸார் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையை விரைவில் சீரமைத்துத் தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தடுப்பை மக்கள் அகற்றினர்.

SCROLL FOR NEXT