சென்னை: அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் நாளை (டிச.13) ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில், மழை காரணமாக 14 மாவட்டங்களில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
‘திமுக தலைமையிலான தமிழக அரசைக் கண்டித்து வரும் கடந்த 9 மற்றும் வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி 9-ம் தேதி பேரூராட்சிகளிலும் பெரும்பாலான இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. மேலும் 13-ம் தேதி நகராட்சி மற்றும் மாநகராட்சிலும், 14-ம் தேதி ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருந்தன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் 14 மாவட்டங்களில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதன்படி சென்னை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,திருவள்ளூர், கள்ளக்குறிச்சி,வேலூர், கிருஷ்ணகிரி மேற்கு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச.13) நடைபெற இருந்த ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் வரும் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேலும், ஏற்கெனவே அறிவித்தபடி ஒன்றியங்களில் 14-ம் தேதியும், ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட பேரூராட்சிகளில் 16-ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.