தமிழகம்

செங்கம் அருகே பாய்ச்சல் கிராமத்தில் சோழர்கால கல்வெட்டு கண்டெடுப்பு: 11-ம் நூற்றாண்டை சேர்ந்தது

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த பாய்ச்சல் கிராமத்தில் 11-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு தானம் வழங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செங்கண்மா வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரேம் ஆனந்த் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாய்ச்சல் கிராமத்தில், கண்ணக்குருக்கை செல்லும் சாலையில் உள்ள வேப்ப மரத்தடியில் கல்வெட்டு இருந்தது. இதை படியேற்றம் செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில், 11-ம் நூற்றாண்டை சேர்ந்த வீர ராஜேந்திர சோழர் கால கல்வெட்டு என்பது தெரியவருகிறது. கோயிலுக்கு தானமாக நிலம் வழங்கியது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டில், “ஸ்வஸ்தி வீர ராஜேந்திர சோழ தெவர்கு யாண்டு ழந 3- வது பெண்ணை வடகரை வாணகபாடி ஆடைநாட்டு நல்லூர்... கயா திரு வாலீசுரமுடையார்” எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 11-ம் நூற்றாண்டில் வீர ராஜேந்திர சோழர் காலத்தில் வாலீஸ்வர முடையார் என்ற கோயிலுக்கு தானமாக நிலம் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கல்வெட்டின் மேற்பரப்பில் சூலம் செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள எழுத்துக்களில் பெண்ணை வடகரை என்பது தென்பெண்ணை ஆற்றின் வடகரைப் பகுதியாகும்.

ஆடைநாடு என்பது ஆடையூர் நாடாகும். திருவண்ணாமலை, செங்கம் பகுதியை உள்ளடக்கியதாகும். வாணகபாடி என்பது திருக்கோவிலூரை குறிப்பதாகும். பாய்ச்சல் மற்றும் கண்ணகுருக்கை கிராமங்களில் வாலீஸ்வரமுடையார் கோயில் இருந்திருக்கலாம். கண்ணகுருக்கை கிராமத்தில் சிவாலயம் அழிந்து கிடக்கிறது. தொல்லியல் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டால், இக்கோயிலை பற்றி வரலாறு கிடைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT