பொள்ளாச்சி: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறையிலுள்ள எஸ்டேட்களில் தேயிலை பறிக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால், பிஹார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெளி மாநிலத் தொழிலாளர்கள் வருகையால், வால்பாறையில் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், வேறு மாநிலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வால்பாறைக்கு வந்து பதுங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது.
இதை தவிர்க்க, வெளி மாநிலதொழிலாளர்களின் ஆதார் அடையாள அட்டை விவரம் சேகரிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதுவரை வெளிமாநிலத் தொழிலாளர்கள் 950 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.