சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, 2020-21 அரவைப் பருவத்துக்கு மத்திய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2,707.50-ஐவிட கூடுதலாக உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.192.50 வழங்கப்பட்டது. இதனால், கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.2,900 கிடைத்தது.
இந்நிலையில், அரசு எடுத்த நடவடிக்கைகளால் 2020-21 அரவைப் பருவத்தில் 95 ஆயிரம் ஹெக்டேராக இருந்த கரும்புப் பதிவு, 2022-23 அரவைப் பருவத்தில் 1.40 லட்சம் ஹெக்டேராகவும், கரும்பு அரவை 98.66 லட்சம் டன்னில் இருந்து 139.15 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தபடி, 2021-22 அரவைப் பருவத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ள டன் ஒன்றுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2,755-ஐவிட, கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கும் வகையில், ரூ.199 கோடிநிதி ஒதுக்கப்பட்டது. சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை டிச.7-ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளின் விவரத்தை சேகரித்து, கூர்ந்தாய்வு செய்து, சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க சர்க்கரை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,950 செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.