சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை (டிச. 13) வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வரும் நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் மேல் தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் டிச. 12-ம் தேதி (இன்று) பெரும்பாலான இடங்களிலும், வரும் 13, 14-ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 15-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச. 12, 13-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) லட்சத்தீவு பகுதிகள், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.