மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜ்பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பாரதியாரின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்த நாள்: ஆளுநர், அரசியல் தலைவர்கள் மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்த நாளையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் அலங்கரிக்கப்பட்டிருந்த பாரதியார் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாரதியார் பேரன் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினர் கவுரவிக்கப் பட்டனர்.

விழாவில் ஆளுநர் ரவி பேசும்போது, ‘‘சிறந்த சமூக சீர்திருத்தவாதியான பாரதியார், நாட்டின் சுதந்திரத்துக்கு ஆற்றிய பங்களிப்பு போற்றத்தக்கது. அவர் திறன்மிக்க இந்தியாவைக் காணவே விரும்பினார். அத்தகைய வலுவான, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். மேலும், இளைஞர்கள் பல்வேறு புதிய மொழிகளைக் கற்க முன்வர வேண்டும்" என்றார்.

சென்னை மெரினாவில் உள்ளபாரதியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அதன் கீழ் அவரது படமும் வைக்கப்பட்டிருந்தது. சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்எல்ஏ த.வேலு, செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் பாரதியார் படத்துக்கு மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத் துணைத் தலைவர் உ.பலராமன் மற்றும் நிர்வாகிகள், பாரதியார் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

தமாகா இலக்கிய அணி சார்பில் தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் முனவர் பாட்ஷா மற்றும் நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தோரும் பாரதியாருக்கு மரியாதை செலுத்தினர்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், ‘‘பெண்ணுரிமைக்காகப் போராடிய, 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ்க் கவிஞர் பாரதி, சுதந்திரப் பயிருக்கு தன் எழுத்துகளால் உயிரூட்டினார். அவரது பிறந்த தினத்தில், பாரதியின் தேசிய சிந்தனைகளைப் போற்றி வணங்குவோம்’’என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT