உடுமலை: முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதிக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கி, திமுக குடும்ப கட்சி என்பதை உறுதி செய்வார் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்அடுத்த குண்டடம் பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் எந்த முன்னணி நடிகர் நடித்த படமாக இருந்தாலும், அது உதயநிதிக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலம்தான் வெளியிட வேண்டும் அல்லது கமிஷன் தர வேண்டும். இதனால், 150-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியிட முடியாத நிலையில் உள்ளன. அதிமுக ஆட்சியில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி திரைப்படங்கள் வெளியாகின.
உதயநிதிக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கி, திமுககுடும்ப கட்சி என்பதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்வார். அக்கட்சிக்காக உழைத்தவர்கள் எத்தனையோ பேர் இன்றும் பதவியின்றி உள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை சாமானியன்கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விலையில்லா ஆடு, கறவைமாடு, தாலிக்கு தங்கம் உள்ளிட்டதிட்டங்களை கைவிட்டதுதான் முதல்வரின் ஓராண்டு சாதனையாக உள்ளது என்றார். அதிமுகவை பொறுத்தவரை சாமானியன்கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும்.