அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை கோடநாடு பங்களாவில் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படு கிறது.
தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற நிலையில், கட்சியின் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலர் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை நேற்று சந்தித்தனர். கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு சசிகலாவிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பு நடைபெற்ற சிறிது நேரத்தில், சசிகலாவை கட்சி தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யக் கூடாது என வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் சிலர் சென்னையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதிமுகவில் கட்சிப் பொறுப்பு களில் இருக்கும் பலரும் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தி யில் சசிகலாவுக்கு எதிரான மனநிலையே காணப்படுவதாக பரவலாகப் பேசப்படுகிறது.
இந்த சூழலில் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. இக்கூட்டத்தை கோடநாடு பங்களா வில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு பங்களா பகுதிக்கு வெளிநபர்கள் யாரும் வரமுடியாது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் அப்பகுதியை நெருங்க முடியாது. தவிர, பொதுக்குழு உறுப் பினர்கள் மத்தியில் அதிருப்தி குரல்கள் எழுந்தால், பேசி சமாதானப்படுத்தவும் வசதியாக இருக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு கோடநாடு பங்களாவில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்வராக இருந்த ஜெய லலிதா அரசுப் பணிகளுக்கு நடுவே ஓய்வெடுக்க கோடநாடு செல்வது வழக்கம். ஒரு தலைமைச் செயலகம் போலவே செயல்படுவதற்கான சகல வசதிகளும் அங்கு உள்ளன. ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி உட்பட பல நவீன வசதிகள் உள்ளன. சுமார் 2,000 பேர் வரை அமர்ந்து கூட்டம் நடத்துவதற்கான வசதிகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
கடந்த 5-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதா மறைவு செய்தி வெளி யாவதற்கு ஓரிரு மணி நேரம் முன் பாக கோடநாடு பங்களாவைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல் வர் எம்ஜிஆர் இறந்தபோது, மறைவு குறித்த செய்தி வெளியான சில மணி நேரத்துக்குள், அவரது வீட்டில் நுழைந்த சிலர் முக்கிய ஆவணங் களை திருடிச் சென்று விட்டதாகவும், அதுபோல நடந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் கோடநாடு பங்களாவில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டதாகவும் கூறப்படு கிறது.