சென்னை: சென்னை ஐஐடியின் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதனை மேம்பாட்டுக்கான டிடிகே மையம், ஐசிஎம்ஆர் ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை நேற்று நடத்தின. சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி முதன்முறையாக சென்னை ஐஐடி ஏற்பாடு செய்துள்ளது.
‘ஸ்போர்ட்ஸ் ஃபார் ஆல்’ என்ற தலைப்பில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், தங்கள் வாழ்நாளில் முதல்முறையாக விளையாட முயற்சி செய்தவர்கள் ஆவர். மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி உட்பட நாடு முழுவதும் இருந்து 214 மாற்றுத் திறனாளிகள், 255 பராமரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், 111 தன்னார்வலர்கள், மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
மேலும், மறுவாழ்வு நிபுணர்கள், புதிய முறைகளை அறிமுகம் செய்வோர், விளையாட்டு வீரர்கள் ஆகியோரும் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளை உற்சாகப்படுத்தினர். கூடைப்பந்து, கிரிக்கெட், துப்பாக்கிச் சுடுதல்,சக்கர நாற்காலி பந்தயம், டென்னிஸ், டேபிஸ் டென்னிஸ், பேட்மிண்டன், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட 12 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தொடங்கிவைத்தார்.