மேன்டூஸ் புயல் பாதிப்பு மீட்பு பணிகளில் ஈடுபட்ட சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுவினர். 
தமிழகம்

தனித்தனியாக குழுக்கள் அமைத்து மீட்பு பணி: பேரிடர்களில் களப்பணியாற்றும் காவல் துறையினர்

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: மேன்டூஸ் புயல், மழை மீட்பு பணியில் போலீஸார் களப்பணியாற்றியது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேன்டூஸ் புயல் கடந்த 10-ம் தேதி அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. தமிழகஅரசு சார்பில் முழு அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், சேதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. சென்னையில் மட்டும்17 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, மீட்புபணிகளில் காவல் துறை, தீயணைப்புதுறையினரும் சிறப்பாக செயல்பட்டு, மக்களிடம் பாராட்டு பெற்றுள்ளனர். போலீஸார், பிற துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றியதுடன், தனித்தனி குழுக்கள் அமைத்தும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினரின் 6 குழுக்கள் புயலுக்கு முன்னதாகவே அனுப்பிவைக்கப்பட்டன.

சென்னையில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக, காவல் துறையை சேர்ந்த தேசிய நீச்சல் வீரர்கள் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த நீச்சல் வீரர்களை கொண்ட 50 பேர் அணி உரிய தளவாடங்களுடன் டிஜிபி அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. போலீஸாரின் ஏற்பாட்டின்பேரில், கடலோரமாவட்டங்களில் மீனவ சமுதாயத்தைசேர்ந்த தன்னார்வலர்களும் படகுகளுடன் மீட்பு பணிக்காக தயார் நிலையில் இருந்தனர். புயல், மழையால் பாதிக்கப்படுவோருக்கு உதவுவதற்கும், மீட்பு பணியில் ஈடுபடுவதற்கும் அனைத்து மாநகர, மாவட்ட போலீஸாரையும் டிஜிபி சைலேந்திர பாபு தயார் நிலையில் வைத்திருந்தார்.

சென்னையை பொருத்தவரை, நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள தலா ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்களைக் கொண்ட 12 சென்னை காவல் பேரிடர் மீட்பு குழுக்கள் தனித்தனியாக சென்னை முழுவதும் மீட்பு பணிகளில் ஈடுபட்டன. சுழற்சி முறையில் 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர். காவல் குழுவினருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற 1,500 ஊர்க்காவல் படையினரும் களமிறக்கப்பட்டனர்.

புயல் நெருங்கிய நேரத்தில், மக்கள்கடலில் இறங்குவதை தடுக்க மெரினா,பெசன்ட் நகர் உட்பட கடற்கரை பகுதிகள் முழுவதும் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து போலீஸார் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரோந்து சென்று கண்காணித்தனர். தனியாக சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்து, பொதுமக்களின் இருப்பிடத்துக்கே சென்று உதவினர்.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது: புயல், மழை மீட்பு பணிகளில் பிற துறையினருடன் இணைந்து காவல் துறையினரும் களப்பணியாற்றினர். சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் விழுந்த மரங்கள், மின்கம்பங்கள், தேங்கிய மழைநீரை காவல் பேரிடர் மீட்பு குழுவினர் அகற்றினர்.

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 228இடங்களில் 256 மரங்கள், 11 மின்கம்பங்கள் விழுந்தன. இதில், சென்னைபெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுவினர் மட்டும் 72 மரங்களை அகற்றினர். மேலும், மாநகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து சாலையில் விழுந்துள்ள 11 மின்கம்பங்களை அகற்றி மின் இணைப்பு சீராக கிடைப்பதற்கும் காவல் குழுவினர் வழிவகை செய்தனர்.

மீட்பு பணியில் துரிதமாக, துடிப்பாக களப்பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார். மேன்டூஸ் மட்டுமின்றி, பொதுமக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பேரிடர்களின்போதும் போலீஸாரும் களமிறங்கி மீட்பு பணியில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT