தமிழகம்

ஜெயலலிதாவுக்கு முதல் அரசியல் வெற்றியை தந்த திருச்செந்தூர்

ரெ.ஜாய்சன்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல் அரசியல் வெற்றியை தந்தது திருச்செந்தூர் தொகுதி. கடந்த 1983-ல் திருச்செந்தூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். வைத்த சோதனையில் வெற்றிபெற்று, தனது அரசியல் பயணத்தில் முதல் வெற்றியை அவர் பதிவு செய்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 1982-ம் ஆண்டு அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தார். குறுகிய காலத்திலேயே அதிமுக நிறுவனரும், அப்போதைய முதல்வருமான எம்ஜிஆரின் நம்பிக்கைக்கு உரியவ ராக மாறினார்.

இதையடுத்து 1983-ம் ஆண்டு அதிமுக கொள்கை பரப்பு செயலாள ராக ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். நியமித்தார். இதனைத் தொடர்ந்து முதல் அரசியல் சவாலை ஜெயலலிதா திருச்செந்தூரில் எதிர்கொண்டார்.

திருச்செந்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த எஸ்.கேசவ ஆதித்தன் மரணமடைந்ததைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. அதிமுக சார்பில் அமிர்த ராஜ் என்பவர் வேட்பாளராக அறி விக்கப்பட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் இந்த பகுதியில் பிரபல மான நெல்லை நெடுமாறன் களம் இறக்கப்பட்டார். இதனால் போட்டி சவாலாகவே இருந்தது.

ஜெயலலிதா அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தல் இது. ஜெயலலிதாவின் திறமையைப் பரி சோதிப்பதற்காக இந்த இடைத் தேர்தல் பொறுப்பாளராக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார். அப்போது திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர் உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் பயணம் செய்து வீடுவீடாக ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். குறிப்பாக பெண்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் அமிர்தராஜ் 1,710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் மூலம் ஜெயலலிதாவும் தனது சவாலில் வெற்றி கண்டார். இந்த வெற்றி ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தின் முதல் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அதிமுகவில் வேகமாக வளர்ந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது அங்கு பிரச் சாரத்துக்கு வந்த ஜெயலலிதா, 1983 இடைத்தேர்தலில் தான் சந்தித்த முதல் அரசியல் சோதனையைப் பற்றி மறக்காமல் குறிப்பிட்டார்.

2009 பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசும்போது, ‘திருச்செந்தூர் இடைத் தேர்தல் என்றாலே எனக்கு நினை வுக்கு வருவது 1983-ம் ஆண்டுதான். அப்போது புரட்சி தலைவர் எம்ஜிஆரால் அதிமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டேன்.

எனது திறமையை சோதிக்கும் வகையில் அப்போது நடந்த திருச் செந்தூர் இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டேன். நான் சந்தித்த முதல் இடைத்தேர்தல் திருச்செந்தூர் இடைத்தேர்தல்தான். அந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

எனக்கு முதல் அரசியல் பரிசாக வெற்றியை தந்தீர்கள். அதுபோல் இந்த இடைத்தேர்தலிலும் வெற்றியை திருச்செந்தூர் வாக்காளர்கள் தர வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT