சென்னை: ‘நீட்’ தேர்வு, புதிய கல்விக்கொள்கை ஆதரவு, பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா எதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் புதிய பதவியை பெற முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி முயற்சித்து வருவதாக, திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், நேற்று திமுகவின் மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான எழிலரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, இந்தி திணிப்பு ஆகியவற்றை ஆதரித்து வந்த நிலையில். தற்போது பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்விலும் மூக்கை நுழைத்து, மோடி அரசுக்கு தனது விசுவாசத்தை காண்பித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர்கள் அல்லாமல் மாநில அரசே, துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும், கண்காணிக்கும் என்றதமிழக அரசின் இரண்டு மசோதாக்களை கடுமையாக தாக்கிஉள்ளார்.
திமுக அரசு 2 மசோதாக்களை பல்கலைக்கழகங்களின் சுயாட்சியை நிர்ணயம் செய்ய நிறைவேற்றியது. துணைவேந்தர்கள் தேர்வுக்குழு, அக்குழு தேர்வு செய்யும் கல்வியாளர்களை தேர்வு செய்யும் உரிமை ஆளுரிடம் இருக்கக்கூடாது என்றும், அரசுக்கே இருக்க வேண்டும் என அந்த மசோதாக்கள் சொல்கின்றன.
இதை பொறுக்காத பாலகுருசாமி, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் சென்றால், ஊழல் பெருகிவிடும், நாடு அழிந்துவிடும் என்று கூறியுள்ளார்.
பல்கலைக்கழக துணை வேந்தர்களெல்லாம் லஞ்சம் கொடுத்துதான் பதவிக்கு வருவார்கள் என்றுச் சொன்னால், நீங்கள் அண்ணாபல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பதவியில் அமர்ந்தபோது, எவ்வளவு லஞ்சம் கொடுத்துஅமர்ந்தீர்கள் என்று சொல்லமுடியுமா? தமிழக அரசின், திட்டக்குழு உறுப்பினராக நீங்கள் பதவிவகித்தபோது, எவ்வளவு லஞ்சம் கொடுத்து பொறுப்புக்கு வந்தீர்கள் என்று சொல்லமுடியுமா? அப்படியானால் அதை ஒப்புக்கொண்டு சிறைக்கு செல்லுங்கள்.
பாஜக இல்லாத மாநிலங்கள் எல்லாம் பல்கலைக்கழகங்களை ஆளுநரிடம் இருந்தும், மத்திய அரசிடம் இருந்தும் பிரிக்கப் பார்க்கிறார்கள் என அவர் கொந்தளிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடிஆண்ட, தற்போதும் பாஜக ஆளும் குஜராத்தில், பல்கலைக்கழக துணைவேந்தரை அந்த அரசே தேர்ந்தெடுக்கும் சட்டத்தை பின்பற்றுகிறது.
பல்கலைக் கழகங்கள், அந்தந்தமாநில அரசுகளால் உருவாக்கப்பட்டவை. அந்த பல்கலைக்கழக துணைவேந்தரை நிர்ணயிக்கும் உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கே உண்டு.முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிநடத்தும் திராவிட மாடல் அரசுகூட்டுத் தலைமையை முன்வைக்கிறது. இங்கு யார் ஊழல் செய்தாலும், சிறை அவர்களுக்கு காத்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.