சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக வண்டலூர், கிண்டி பூங்காவில் மரங்கள் விழுந்தாலும் உயிரினங்கள் பாதுகாப்பாக உள்ளதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தது.
சென்னையில் இதுவரை 300க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டங்களில் 68 மரங்கள் விழுந்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் அதிக அளவு மரங்கள் விழுந்துள்ளது. இதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வண்டலூர், கிண்டி பூங்காவில் மரங்கள் விழுந்தாலும் உயிரினங்கள் பாதுகாப்பாக உள்ளதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாண்டஸ் புயல் காரணமாக வண்டலூர் மற்றும் கிண்டி பூங்காவில் அதிக அளவு மரங்கள் விழுந்துள்ளது. ஆனாலும் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இன்று (டிச.10) பூங்காங்கள் மூடப்படுகிறது." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.