சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் தடை செய்யப்படும் என்று தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயலின் வெளிவட்டப் பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் தொடங்கியது. 9.30 மணிக்கு புயலின் வெளிபுறப்பகுதி கரையை கடக்கத் தொடங்கி மையப்பகுதி 11.30 மணிக்கு கரையை கடக்கும். பின்புற வெளிப்பகுதி அதிகாலையில் கரையை கடக்கும். இதனால் தற்போது மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 60 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் தடை செய்யப்படும் என்று தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும். புயலின் பொது சேதமடைவதை சரிசெய்ய மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் அதிகம் உள்ளதாக சொல்லப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.