தமிழகம்

ஜெயலலிதாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்: கருணாநிதி

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என திமுக தலைவர் கருணாநிதி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவு குறித்து கருணாநிதி இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''திரைப்பட உலகில் கதாநாயகியாக 120-க்கும் அதிகமான தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ் எய்தியவர் ஜெயலலிதா. அதன் பின்னர் எனது அருமை நண்பர் புரட்சி நடிகர் எம்ஜிஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார்.

1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் செயல்பட்டார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று விரைவில் வீடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன்.

கட்சிகளைப் பொறுத்து எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், தனது கட்சியின் நலனுக்காக துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர் என்பதில் எவருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது. குறைந்த வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். எனினும் அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெயலலிதாவை இழந்து வாடும் அவருடைய கட்சியின் முன்னணியினருக்கும் லட்சக்கணக்கான தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT