சென்னை: வங்கக் கடலில் நிலவிவரும் ‘மாண்டஸ்' புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தீவிரப் புயலில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. புயலாக வலுவிழந்த நிலையிலேயே புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று (டிச. 9) நள்ளிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் "வங்கக் கடலில் நிலவிவரும் ‘மாண்டஸ்' புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தீவிரப் புயலில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று (டிச. 9) நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும். தற்போது 13 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து புயலைக் கண்காணித்து வருகிறோம். தற்போதைய நிலவரப்படி புயலால் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
உபரி நீர் திறப்பு: இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்படுகிறது. அதன்படி மிகக் கனமழை எச்சரிக்கை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணியளவில் முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 140 கன அடியாக உள்ளது. 21 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 17 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்தும் இன்று மதியம் 12 மணியளவில் தலா 100 கன அடி உபரிநீர் திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.