திருவள்ளூர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தென்மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7-ம் தேதி இரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. இது தற்போது தீவிரப் புயலாக முன்னேறி வருகிறது. இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் இது புயலாக வலுவிழந்து கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உபரி நீர் திறப்பு: இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்படுகிறது. அதன்படி மிககனமழை எச்சரிக்கை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணியளவில் முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 140 கன அடியாக உள்ளது. 21 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 17 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்தும் இன்று மதியம் 12 மணியளவில் தலா 100 கன அடி உபரி நீர் திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
பரவலாக கனமழை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் கரூர் மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.