குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு நேற்று அஞ்சலி செலுத்திய பொதுமக்கள். 
தமிழகம்

ஹெலிகாப்டர் விபத்தின் ஓராண்டு நிறைவு: பிபின் ராவத்துக்கு நஞ்சப்பசத்திரம் மக்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

குன்னூர்: குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, உயிர்இழந்தவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் உட்பட 14 பேர், குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்து நிகழ்ந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் உயிரிழந்தவர்களின் புகைப்படம் முன்பு விளக்கு ஏற்றியும், மலர் தூவியும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

நஞ்சப்பசத்திரம் மக்களுக்கு ராணுவம் சார்பில் கம்பளிகளை வழங்கிய
லெப்டினென்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ். படங்கள்: ஆர்.டி.சிவசங்கர்

விபத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட மக்களுக்கு மாவட்டஆட்சியர் சா.ப.அம்ரித், லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் ஆகியோர் நன்றி கூறினர். மேலும், அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனஉறுதியளித்தனர். ராணுவம் சார்பில் கிராம மக்களுக்கு கம்பளிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட நிர்வாகம் சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய்த் துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT