தமிழகம்

‘நாம் ஒவ்வொருவரும் பைத்தியம்!’

ஹெச்.ராமகிருஷ்ணன்

நேற்று (புதன்) அதிகாலை காலமான சோ அவர்கள் ஒரு நாடக நடிகர், நாடக தயாரிப்பாளர், நாடக இயக்குநர், திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா, வழக்கறிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், ஆன்மிக அறிஞர், அரசியல் விமர்சகர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல அவதாரம் எடுத்திருக்கிறார்.

இதில் எது அவருக்கு மிகவும் பிடித்த பாத்திரம் என்றால், ‘‘பிடிக்காதது நாடாளுமன்ற உறுப்பினர் ஆனது ஒன்று மட்டுமே. மற்றபடி மீதி எல்லாம் நான் விரும்பிச்செய்வது. நான் எதையுமே முயற்சி செய்து பார்த்துவிடுவது என்று நினைப்பவன். நம்மால் முடியாது என்று எதையுமே நான் விட்டுவிடுவதில்லை. பார்த்துவிடுவோம் என்ற எண்ணம்தான். அதிலே, ‘அதிர்ஷ்டம்’ எனக்கு ரொம்பவே கை கொடுத்தது. எனக்கு வந்த மாதிரி வாய்ப்புக்கள் நிறையப் பேருக்கு வந்ததில்லை. அதுவும், எல்லாமே என்னைத் தேடி வருமே தவிர, நான் எதையும் தேடிப் போவதில்லை. எதையுமே ஒரு 'எக்ஸ்பெரிமெண்ட்' ஆகத்தான் நான் ஆரம்பிப்பேன்” என்பார் சோ.

‘‘ஆன்மிகம் ஒரு சமுத்திரம். அதன் கரையில் நின்று வேடிக்கை பார்க்கிறேன்’’ என்பார் சோ அடக்கமாக. அவர் ‘சம்பவாமி யுகே யுகே’ நாடகம் எழுதியபோது, அதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அடிக்கடி பகவத் கீதையை மேற்கோள் காட்டுவார். அதற்காகவே பகவத் கீதையை முழுதுமாக படித்தார். எண்ணற்ற அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகும் அரிய வாய்ப்பைப் பெற்றார். இவர்களில் காமராஜ், மொரார்ஜி, ஆச்சார்ய கிருபளானி ஆகியோரை மிகவும் தான் மதிப்பதாகச் சொல்வார். ‘அவர்கள் உண்மையை மட்டுமே பேசுவார்கள். துளியும் போலித்தனமே இருக்காது. சத்தியத்துடன் நாம் பேசிக் கொண்டிருப்பது போலத்தான் இருக்கும்’ என்று விளக்கம் தருவார் சோ.

ஜோதிடத்தைப் பற்றி சொல்கிறபோது ‘‘ஒருசில துல்லியமாக நடக்கிறது; ஒருசில பேத்தலாக இருக்கிறது‘’ என்பதே சோவின் கருத்து. ‘‘ஜோதிடத்திலே ஏதோ ஒண்ணு இருக்கு. ஒரு சயின்ஸ் போன்றது அது. அதில் விஷயமே இல்லை என்றும் சொல்ல முடியாது. விஷ்ணு நம்பூதிரி என்பவர் ராஜீவ் காந்திக்கு ஒரு கண்டம் இருக்கு; உயிருக்கே ஆபத்து என்று சொல்லியிருந்தார். ராஜீவ் காந்திக்கே கடிதம் எழுதியிருந்தார். அதைத் தடுக்க இரண்டு மிகச் சாதாரண யோசனைகளையும் சொல்லியிருந்தார். ஆனால், தேர்தல் நெருக்கடியில், அதற்கெல்லாம் நேரமில்லை என்று ராஜீவ் சொல்லிவிட்டார். அதே போல, ‘மதர் இந்தியா’ பத்திரிகையில் பாபுராவ் பட்டேல், சஞ்சய் காந்தி மறைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு விமான விபத்தில் கண்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எழுதியிருந்தார். ஆக, ஜோதிடம் என்பது சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் துல்லியமாக இருக்கும்!’’ என்பது சோவின் அபிப்ராயம்.

‘நாம் ஒவ்வொருவரும் பைத்தியம்!’ என்பது சோவின் கருத்து. அது 1967-ம் ஆண்டு என்று நினைவு. நாடக உலகில் சோ கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலம். சாஸ்த்திரி பவன் பொழுதுபோக்குச் சங்கத்தில், ஒருமுறை அவரைப் பேச அழைத்திருந்தோம். அப்போது சஃபையர் திரை அரங்கில் ஓடிக் கொண்டிருந்த ‘இட் இஸ் எ மேட் மேட் வேர்ல்டு' என்ற படத் தலைப்பை வைத்து, இரண்டு மணி நேரம் அட்டகாசமாகப் பேசினார் சோ. கடைசியில், ‘‘பணப் பைத்தியம், அதிகாரப் பைத்தியம், சாப்பாட்டுப் பைத்தியம், சினிமா பைத்தியம்… இப்படி ஒவ்வொன்றிலும் நாம் ஏதோ ஒரு பைத்தியமாக அலைகிறோம். ஆனால், கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள் ‘பரப்பிரம்ம’ நிலையில் எதன் மீதும் பைத்தியம் இல்லாமல் இருக்கிறார்கள்!’’ என்று முடித்தபோது ஒரே கைத்தட்டல் மழை!

1975-ம் ஆண்டு. ‘அவசர நிலை பிரகடனம்’ அமலில் இருந்த காலகட்டம். ‘துக்ளக்’ பத்திரிகையைத் தணிக்கைக்காக அவரே பத்திரிகைத் தகவல் அலுவலத்துக்கு எடுத்து வருவார். ஒரு தடவை, நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு கேலிப் படம். அதில் ஒருவர் கப்படா மீசை வைத்துக் கொண்டிருப்பார். ‘மீசை குத்துகிறதே’, ‘மீசை சகிக்கவில்லையே' போன்ற விளக்கங்கள் கீழே இருந்தன. அப்போது அமலில் இருந்த மிசா சட்டத்தைதான் சோ கேலி செய்கிறார் என்பதை அறியாத தணிக்கை அதிகாரி, முதலில் அதை அனுமதித்துவிட்டார். பின்னர், விஷயத்தைப் புரிந்துகொண்டவர் அந்தக் கேலிச் சித்திரத்தை நிராகரித்தார். அவ்வளவுதான், சோவுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. சோவுக்கு இப்படியும் கோபம் வருமா என்பதை அபோதுதான் தெரிந்துகொண்டோம்.

நாளை என்பதைப் பற்றி சோ என்றைக்குமே கவலைப்பட்டதே இல்லை. நாளைக்காக என்று எதையுமே அவர் திட்டமிட்டதும் இல்லை. ‘எதுவும் ஒரு சர்ப்ரைஸாகவே இருக்கலாமே…’ என்பார்.

ஹெச்.ராமகிருஷ்ணன், கட்டுரை ஆசிரியர் - சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி ஆசிரியர் தொடர்புக்கு: ramakrishnan.h@gmail.com

SCROLL FOR NEXT