தமிழகம்

அரசு அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் நிறைவு: வங்கி, ஏடிஎம்.களில் தொடரும் பண தட்டுப்பாடு - பொதுமக்கள் கடும் அவதி

செய்திப்பிரிவு

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து ஒரு மாதம் நிறைவாகியுள்ள நிலையில் வங்கி, ஏடிஎம்களில் பணத் தட்டுபாடு தீரவில்லை. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாடுமுழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்குச் சென்றனர். ஆனால், புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு அச்சடிக்கப்படாததால் பொதுமக்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்க முடியாமல் வங்கி ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், ஏடிஎம்களும் செயல்படாமல் முடங்கிய வண்ணம் உள்ளன.

மத்திய அரசு இந்த அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், வங்கி, ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு தீரவில்லை. இதனால், பொதுமக்கள் அவதிப்படுவது தொடர்கிறது. தற்போது மாதத்தின் முதல் வார நாட்கள் என்பதால் பொதுமக்கள் தங்களது சம்பள பணம் எடுக்கவும், வீட்டு வாடகை, அன்றாட செலவுகளுக்கு பணம் எடுக்கவும் வங்கிகளில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

திறந்து இருக்கும் பெரும்பாலான ஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருவதால் அதை சில்லறையாக மாற்ற பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும், குடியிருப்புகளில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் நிரப்பாததால் கடந்த 2 வாரங்களாக மூடியே இருக்கின்றன.

இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

சென்னையில் குடியிருப்புகள் அதிகமாக இருக்கும் பெரும்பாலான இடங்களில் மக்களின் வசதிக்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஏடிஎம் வசதியுடன் கிளைகள் திறந்திருந்தன. சில இடங்களில் ஏடிஎம் வசதி மட்டுமே இருக்கும். இதற்கிடையே, சமீபத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு பெரும்பாலான இடங்களில் ஏடிஎம்கள் 2 வாரங்களாக மூடியே இருக்கின்றன.

குறிப்பாக தில்லைகங்கா நகர், பழவந்தாங்கல் பகுதிகளில் இருக்கும் ஏடிஎம்களுக்கு பணம் எடுக்க வருபவர்கள் வந்து பார்த்து விட்டு, ஏடிஎம் பழுதாகியுள்ளது என கூறிவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பழுதாகியுள்ள ஏடிஎம்களை உடனடியாக சரிசெய்ய வங்கி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் விளக்கம்

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘வங்கி கிளைகளில் ரூ.2000 நோட்டுகள்தான் அதிகமாக உள்ளன. ரூ.100, 500 நோட்டுகள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர். புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி விரைவில் தொடங்கவுள்ளது. இந்த புதிய நோட்டுகள் வந்தால்தான் ஒரளவுக்கு சில்லறை பிரச்சினை தீரும். இருப்பினும், வரும் ஏப்ரல் மாதம் வரையில் சில்லறை பிரச்சினையின் தாக்கம் இருக்கும்’’ என்றனர்.

வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது: பழைய 500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து ஒரு மாதம் ஆகியும் வங்கி, ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு தீரவில்லை. வங்கி கிளைகளில் வாடிக்கையாளர் ஒருவர் சுமார் ரூ.24 ஆயிரம் வரையில் எடுத்துக் கொள்ள வழி வகை செய்யப்படும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால், அதற்கு ஏற்றார்போல் வங்கி கிளைகளுக்கு போதிய அளவில் பணம் அனுப்பவில்லை. இதனால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு வாடிக்கையாளர்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து வருகிறது. சில மாநிலங்களில் வங்கி கிளைகள் தாக்கப்படுகின்றன. எனவே, பணத் தட்டுப்பாடு போக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT