தமிழகம்

2011 டிச. 19-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்: 5 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னிறுத்தப்படும் சசிகலா

செய்திப்பிரிவு

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 19-ம் தேதிதான் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். இப்போது அவரைத் தான் அதிமுக பொதுச் செயலாள ராகவும், முதல்வராகவும் பொறுப் பேற்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவின் பெயர் முன்மொழியப்பட்டு வருகிறது. அவரை பொறுப்பேற்க வலி யுறுத்தி தொடர்ந்து, கட்சியின் 50 மாவட்டங்கள் மற்றும் பல்வேறு அணிகள் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள சசிகலாவிடம் வழங்கப்பட்டு வருகிறது.

அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் தலைவர் வி.எஸ்.சேதுராமன் மற்றும் நவநீதகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் சசிகலாவை நேற்று சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத் தினர். கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத், தருமபுரி மாவட்டம் சார்பில் அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், திண்டுக்கல் மாவட்டம் சார்பில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் அமைச்சர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் சசிகலாவை நேற்று சந்தித்து தீர்மான நகலை வழங்கினர். போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை முன்னிறுத்தி இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே டிசம்பர் 19-ம் தேதிதான் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். அப்போது அதிமுக வின் தலைமை செயற் குழு உறுப்பினராக சசிகலா இருந்தார்.

அன்றைக்கு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெய லலிதா வெளியிட்ட அறிக்கையில், ‘சசிகலா, எம்.நடராஜன் (சசிகலா வின் கணவர்), திவாகரன் (சசிகலா வின் சகோதரர், மன்னார்குடி), டி.டி.வி.தினகரன் (முன்னாள் எம்.பி.), வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன் (நடராஜனின் சகோதரர்), ராவணன், மோகன் (அடையார்), குலோத்துங்கன், ராஜராஜன் ஆகிய 12 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர். இவர் களுடன் அதிமுக தொண்டர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என கூறப்பட்டிருந்தது.

விளக்க அறிக்கை

அதன்பின் 3 மாதங்கள் அமைதியாக இருந்த சசிகலா, 2012-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

கடந்த 1988-ம் ஆண்டில் இருந்து அக்காவின் (ஜெயலலிதா) போயஸ் தோட்ட இல்லத்தில் அவருடன் வசித்து வந்தேன். அவருடன் இல்லத்தில் இருக்கும் வரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவுக்குதான் எனக்கு தெரிந்தது. டிசம்பர் மாதம் அவரை விட்டுப் பிரிந்து, வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழல் உருவான பிறகுதான், நடந்த உண்மைகள் முழுமையாக தெரியவந்தன.

உறவினர்கள், நண்பர்கள் சிலர் என் பெயரை தவறாகப் பயன்படுத்தி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர். அக்கா வுக்கு எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என் பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இவை எல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தன என்பது உண்மை. கனவிலும் அக்காவுக்கு நான் துரோகம் நினைத்ததில்லை. அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்.

என்னைப் பொறுத்தவரை அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டப்பேரவை, நாடாளு மன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ துளியும் ஆசையில்லை.பொதுவாழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவுக்கு உண்மை தங்கையாக இருக்கவே விரும்புகிறேன்.

இவ்வாறு சசிகலா தெரிவித் திருந்தார்.

இந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, சசி கலாவை மட்டும் அடுத்த 3 தினங்களில் அதாவது மார்ச் 31-ம் தேதி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டார். ஆனால், நடராசன் உள்ளிட்ட யாரையும் அவர் கட்சியில் சேர்க்காமல் ஒதுக்கியே வைத்திருந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, இன்றைக்கு அதே கட்சிக்கு பொதுச் செயலாளராக முன்னிறுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT