சென்னை: அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர்வன்னியரசு உள்பட அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தனது ஆதரவாளர்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்புதெரிவித்தனர்.
மேலும், அர்ஜூன் சம்பத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அர்ஜூன்சம்பத் மாலை அணிவிக்க விடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்தனர்.
இந்த விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட 29 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.