சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில், ரூ.97 கோடி மதிப்பில் "வந்தே பாரத் விரைவு ரயில்" தயாரிக்கப்பட்டு, டெல்லி- வாரணாசி, டெல்லி-காத்ரா இடையே இயக்கப்படுகின்றன. இதேபோல, அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் 3 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, வெவ்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. இதில் ஒரு வந்தே பாரத் ரயில், சென்னை-மைசூர் இடையே இயக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட 6-வது வந்தே பாரத் ரயில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர்- மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரமதர் மோடி வரும் 11-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறும்போது, "அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள 6-வது வந்தே பாரத் ரயில், பிலாஸ்பூர்-நாக்பூர் இடையேஇயக்கப்பட உள்ளது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறன்கொண்ட இந்த ரயிலில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன" என்றனர்.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களைத் தயாரித்து, இயக்கரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.