பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயம் அதிகளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதில், போலி 10 ரூபாய் நாணயம் வெளியாகி உள்ளதாகவும், பொதுமக்கள் அந்த நாணயத்தை வாங்க வேண்டாம் என்றும் சமூக வலை தளங்களில் செய்தி பரவி வருகிறது.
இதன் காரணமாக வணிக நிறுவனங்கள் 10 ரூபாய் நாணயங் களை வாங்க மறுக்கின்றன. ஏற்கெனவே சில்லரை தட்டுப்பாடு உள்ள நிலையில் 10 ரூபாய் நாணயங்களை மாற்ற முடியாமல் ஏழை எளிய மக்கள் தவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வணிகர்களி டம் கேட்டபோது, "நாணயங்களைப் பராமரிப்பது மிக கடினம். ரூபாய் தாள்களாக இருந்தால் கவுண்டிங் மெஷினில் வைத்து சுலபமாக கணக்கிட முடியும். ஆனால், நாணயங்களை அப்படி கணக்கிட முடியாது. மேலும், இந்த நாணயங்களை, வங்கி அதிகாரிகள் வாங்க மறுப்பதால் வேறு வழியில்லாமல் நாங்களும் வாங்குவதில்லை" என்றனர்.
விக்கிரமராஜா கருத்து
தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறிய தாவது: நேற்று முன்தினம் தேனியில் நடந்த கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. வங்கிகளில் இந்த நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் வியாபாரிகளும் வாங்குவ தில்லை. வங்கி மேலாளர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மாட்டோம் அல்லது செல்லாது என எழுத்துபூர்வமாக எழுதி தருமாறு கேட்க வேண்டும் என வணிகர்களிடம் கூறியுள்ளேன் என்றார்.
த.வெள்ளையன் பதில்
தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் கூறும்போது, "ஒருசில பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை வணிகர்கள் வாங்குகின்றனர். வங்கிகளில் வாங்க மறுக்கிறார்கள் என்பதை விசாரித்து சொல்கிறேன்" என்றார்.
இதுகுறித்து வங்கி அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, "வாடிக்கையாளர்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கி றார்கள். அதனால் சில வங்கி அதிகாரிகள் நாணயங்களை வாங்க மறுக்கலாம். அப்படி மறுத் தால் சம்பந்தப்பட்ட வங்கியின் மேலதிகாரியிடம் புகார் அளிக்க லாம்" என்றனர்.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ள தாவது: 10 ரூபாய் நாணயம் செல் லாது என பரவும் தகவல் ஒரு வதந்தி. அதை மக்கள் நம்ப வேண் டாம். இந்த நாணயம் செல்லத்தக்க ஒன்றுதான். இதனால் யாரும் குழப்பமடைய வேண்டாம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வரும் செய்தி தவறானது. வீண் வதந்திகளைப் பரப்பும் நபர்கள் மீது இந்திய சட்ட விதிமுறை 489-ஏ மற்றும் 489-இ பிரிவின் கீழ் தண்டனை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.