சென்னை: குழந்தை கடத்தல், போக்சோ, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள 9 வழக்கறிஞர்கள், விசாரணை முடியும் வரை வழக்கறிஞராக தொழில்புரிய பார் கவுன்சில் இடைக்கால தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கை:
சென்னை செங்குன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் வி.நந்தகோபாலன், தனது கட்சிக்காரர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செங்குன்றம் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல திருச்சி அரியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.பிரபு மீது லால்குடி மகளிர் போலீஸார், குழந்தை கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் வழக்கறிஞர் ஆர்.ராஜா மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட் டுள்ளன.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவழக்கறிஞர் எஸ்.பெருமாள், அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியும், சென்னை கிழக்கு அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.பொன் பாண்டியன் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், மயிலாடுதுறை வழக்கறிஞர் முத்தாட்சி, திருவாரூர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, சென்னை பிருந்தாவன் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரோஜா ராம்குமார், மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.அருண் பாண்டியன் ஆகியோர் மீது தாம்பரம் மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இவர்கள் 9 பேரும் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைவிசாரணை முடியும் வரை வழக்கறிஞராக தொழில்புரிய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.