கோவை: அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ், கட்சி பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். அவர், தற்போது அதிமுகவில் இருந்தே விலகியுள்ளார். இந்நிலையில், அவர் இன்று திமுகவில் இணைகிறார்.
இது தொடர்பாக ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கோவை செல்வராஜ் கூறியதாவது: ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இவர்களுடன் பயணிக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன். அதிமுக 4 ஆக உடைந்து விட்டது. இனி அவர்கள் யாரும் சேரவும் முடியாது, அதிமுகவையும் காப்பாற்ற முடியாது.
பழனிசாமியும், ஓபிஎஸ்சும் பாஜகவின் கொத்தடிமைகளாக மாறிவிட்டனர். இன்றைய சூழலில், தமிழகத்தையும், தமிழக மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலினை தவிர, மற்ற எந்த தலைவருக்குமே தகுதியில்லை. இதனால் யாருடைய வற்புறுத்தலுமின்றி, சென்னையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைகிறேன்.
தற்போது மாவட்ட செயலாளர்களாக உள்ள 3 பேர், முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் என 5 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்வு பின்னர் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.