ஈரோடு: அதிமுக வலிமையாகவும், ஒரு முகமாகவும் உள்ளது, என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டி, திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோபியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
அதிமுக வலிமையாகவும், ஒரு முகமாகவும் உள்ளது. ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் பழனிசாமி தலைமையை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. பழனிசாமிக்கு ஆதரவாக 98.5 சதவீதம் அதிமுகவினர் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும், என்றார். கூட்டத்தில் பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, முன்னாள் எம்பி சத்தியபாமா, முன்னாள் எம்எல்ஏ ரமணீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.