தருமபுரி: தருமபுரி நகராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் தீர்மானங்களை புறக்கணித்ததாலும், திமுக கவுன்சிலர்கள் பங்கேற்காததாலும் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி நகராட்சி அலுவலக வளாக அண்ணா கூட்டரங்கில் நேற்று மாலை நகராட்சிக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, நகராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் சித்ரா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 51 தீர்மானங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டது. தருமபுரி நகராட்சியின் 33 வார்டு கவுன்சிலர்களில் 13 அதிமுக கவுன்சிலர்கள் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதேநேரம், 3 திமுக கவுன்சிலர்கள், திமுக ஆதரவு பெற்ற ஒரு சுயேச்சை கவுன்சிலர் ஆகியோர் மட்டுமே திமுக தரப்பில் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர்கள், ‘நகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, குடிநீர் விநியோகம், சுகாதாரம், தெருவிளக்கு, குப்பை அகற்றம் உள்ளிட்ட பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை.
ஆனால், நகராட்சி நிர்வாகவிருப்பத்துக்கு ஏற்ற பணிகளைமட்டும் தீர்மானமாக்கி கவுன்சிலர்கள் ஒப்புதலுக்காக கூட்டத்தில் முன்வைக்கப்படுகிறது. வார்டு சபா கூட்டம் நடத்த தரைவிரிப்பு, பேனா-குறிப்பேடு மட்டும் ரூ.5 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இதுபோலவே, பல பணிகளும் கூடுதலாக செலவழித்து முடிக்கப்படுகிறது. இதுபோன்ற நோக்கத்துடன் கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு அதிமுக கவுன்சிலர்கள் ஒப்புதல் வழங்க மாட்டோம்.
இன்றைய கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் தான் பெரும்பான்மையாக உள்ள நிலையில் எங்கள் கருத்தை ஏற்று தீர்மானம் எதையும் நிறைவேற்றக் கூடாது’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீர்மானங்களுக்கு அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஒப்புதல் வழங்க மறுப்பு தெரிவித்த சம்பவம் மற்றும் திமுக-வின் கைவசம் உள்ள தருமபுரி நகராட்சியின் நேற்றைய கூட்டத்தில் பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் பங்கேற்காத சம்பவம் ஆகியவற்றால் தருமபுரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.