தமிழகம்

சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறாமல் விரிவாக்கப்பணி: தனியார் ஆலைக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்துக்கு தடை

செய்திப்பிரிவு

சென்னை: சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறாமல் விரிவாக்கப்பணி மேற்கொண்டதாக சன் பார்மா என்ற தனியார் நிறுவனத்துக்கு ரூ. 10 கோடி அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகேயுள்ள பகுதியில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் சன் பார்மா என்ற மருந்து உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் தடையில்லா சான்று பெறாமல் ஆலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், இந்த ஆலைக்கு ரூ. 10 கோடியே 58 லட்சத்தை அபராதமாக விதித்தது. மேலும் ஆலை செயல்பாடுகளால் ஏற்பட்ட சேதாரம் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சன்பார்மா நிறுவனம் தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, ஆர்.ஹேமலதாஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆலை செயல்பாட்டால் நிலத்தடி நீர் பாதிப்படையவில்லை என்பதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகைக்கும், ஆலையை ஆய்வு செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும், என சன் பார்மா தரப்பில் வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், சன் பார்மா நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.10.58 கோடி அபராதத்தை வசூலிக்க இடைக்காலத் தடை விதித்தனர். மேலும் இது தொடர்பாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டவை பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT