சென்னை: மனை, கட்டிடங்களுக்கு நகர மற்றும் ஊரமைப்புத் துறை அனுமதிக்காக இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டிய சூழலில், இணையதளத்தில் உள்ள பிரச்சினை காரணமாக விண்ணப்பங்களை பதிவேற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வீட்டுமனைக்கான ‘லே அவுட்’ அனுமதி, கட்டிடங்களுக்கான வரைபட அனுமதி உள்ளிட்ட அனுமதிகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகள், நகர மற்றும் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மனைப்பிரிவு, கட்டிடம்: தற்போது, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில், ஒப்புதல் பெறுவதற்கான சிக்கல்களை களையும் நோக்கில், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை சம்பந்தப்பட்ட அமைப்புகள் ஏற்படுத்தியுள்ளன.
எனவே தற்போது, மனைகள், கட்டிடங்களுக்கான அனுமதி பெறுவதற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக, தற்போது ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் வழங்குவதற்காக இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 24-ம் தேதி முதல் மனைப்பிரிவு வரைபடத்துக்கான விண்ணப்பங்கள், செப்.10 முதல் கட்டிடம் மற்றும் நில உபயோக மாற்றத்துக்கான விண்ணப்பங்கள் ஒற்றை சாளர இணையதளம் மூலமாகவே பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், `இந்து தமிழ் திசை' நாளிதழின் பிரத்யேக தொலைபேசி வழி புகார் அளிக்கும் உங்கள் குரல் சேவையை தொடர்புகொண்டு சென்னையை சேர்ந்த பிரபாகரன் என்ற வாசகர் கூறும்போது,‘‘டிடிசிபி அனுமதி பெறுவதற்கான இணையதளத்தில் உள்ள பிரச்சினை காரணமாக விண்ணப்பங்களை பதிவேற்றுவதில் கடும் சிரமங்கள் உள்ளன. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு உரிய தீர்வுகாண வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மென்பொருள் மேம்பாடு: இதுகுறித்து டிடிசிபி அதிகாரிகளிடம் கேட்ட போது,‘‘சிக்கல்களுக்கு தீர்வு காண 044 29585247 என்ற தொலைபேசி எண் மற்றும் support_swp.dtcp@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை அலுவலக நேரங்களில் பயன்படுத்தி விண்ணப்பங்களில் எழும் சிக்கல்களை சரி செய்து கொள்ளலாம். இது தவிர, இதற்கான மென்பொருள் தொடர்ந்து நவீனப்படுத்தி மேம்படுத்தப்பட்டு வருகிறது ’’ என்றனர்.
ஆனாலும், ஒற்றை சாளர இணையதளத்துக்கான மென்பொருள் வடிவமைப்பில் சிக்கல்கள் உள்ளதால், விண்ணப்பங்களை பதிவு செய்வதில் தொடர் குழப்பங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய கட்டுநர் சங்கத்தின் நகராட்சி மற்றும் டிடிசிபிகுழுவின் தலைவர் எஸ்.ராமபிரபு கூறுகையில்,‘‘ ஒற்றை சாளர இணையதளத்தை பொறுத்தவரை, மனை மற்றும் கட்டிட அனுமதிகளை அளிக்கும் உள்ளாட்சி அமைப்புகள், டிடிசிபி, சிஎம்டிஏ என மூன்றுக்கும் ஒரே மாதிரியான வடிவமைப்பு இருக்க வேண்டும். ஆனால், அப்படியில்லை, 3 அமைப்புகளுக்கும் வெவ்வேறு மாதிரியான மென்பொருள்கள் வடிவமைப்பு வெவ்வேறு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன.
பொதுவான கட்டிட விதிகள்: இதனால் ஒன்றுக்கொன்று பொருந்தாத நிலையும் உள்ளது. சிஎம்டிஏ இணையதளம் சிறப்பாக செயலாற்றி வரும் நிலையில் டிடிசிபியில்தான் இந்த சிக்கல்கள் உருவாகின்றன. இந்த பிரச்சினையை களைய ஒரே நிறுவனத்தின் மூலம் ஒரே மாதிரியான விவரங்களுடன் கூடிய இணையதள வசதியை ஏற்படுத்த வேண்டும். இதுதவிர, பொதுவான கட்டிட விதிகள் முழுமையாக அதில் இடம் பெற வேண்டும்.
இதன் மூலம் தேவையற்ற காலதாமதம், தேவையற்ற கேள்விகளை தவிர்க்க முடியும். மாநிலம் முழுவதும் இதனால் பொதுமக்கள், கட்டுமான நிறுவனத்தினர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். விரைவில் இதை சீரமைக்க வேண்டும்’’ என்றார்.