தமிழகம்

பூந்தமல்லி | போலி நில ஆவணம் மூலம் ரூ.1 கோடி மோசடி புகாரில் பூந்தமல்லியில் 3 பேர் கைது

செய்திப்பிரிவு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே போலி நில ஆவணம் மூலம் ரூ.99 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சீரடி சாய் நகரைச் சேர்ந்தவர் வடிவேலு (50). புதிய வீட்டுமனை வாங்க விருப்பப்பட்ட இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த நிலத் தரகர்களான செல்வகுமார், சின்னத்துரை ஆகியோர் அறிமுகமாகினர்.

அந்த அறிமுகம் மூலம் காட்டுப்பாக்கம் அருகே உள்ள செந்தூர்புரத்தில் உள்ள சென்னை, கோபாலபுரத்தைச் சேர்ந்த கல்யாணி, தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான 2,400 சதுரஅடி நிலத்தை, காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த அந்தோணி ஜெனித் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பொது அதிகாரம் மூலம் ரூ.99 லட்சத்துக்கு செல்வகுமார், சின்னத்துரை உள்ளிட்ட 5 பேர் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, வடிவேலு ஆவடி ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலி ஆவண மோசடி பிரிவு ஆய்வாளர் பாலன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், போலி நில ஆவண மூலம் வடிவேலுவிடம் ரூ.99 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார், காட்டுப்பாக்கம், மேற்கு செந்தூர்புரம் பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (39), செல்வகுமார் (38), குருசாமி (62) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அந்தோணி ஜெனித், சின்னத்துரை ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT