சென்னை: உயர் நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை வழக்கறிஞர்கள் சிலர் சூழ்ந்து கொண்டுகோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கரை காவி(ய) தலைவன் என குறிப்பிட்டு சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்த தனக்கு அனுமதி வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்,உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துமக்கள் கட்சி சார்பில் அம்பேத்கரின் சிலைக்கு காவி உடையோ, காவி துண்டோ, விபூதி, குங்குமம் வைக்க மாட்டோம்.
ஊடகங்களுக்கு பேட்டியளிக்க மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி, அர்ஜுன் சம்பத் உட்பட 5 பேர்அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்காக நேற்று உயர் நீதிமன்றம் வந்திருந்த அர்ஜுன் சம்பத், அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்றார். அப்போது அங்கிருந்த சில வழக்கறிஞர்கள் அவரை சூழ்ந்துகொண்டு, அம்பேத்கரை அவமரியாதை செய்ததாகக் கூறி கோஷம் எழுப்பினர்.
பதிலுக்கு அர்ஜுன் சம்பத்தும் கோஷம் எழுப்பினார். இதனால், ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் சிலர் அவரை தாக்க முற்பட்டனர். போலீஸார் அர்ஜுன் சம்பத்தை பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வெளியே கொண்டு வந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.